எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
திருமணப் பொருத்தம்
பொதுவாக, திருமணத்திற்காக ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் இடையே 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. பண்டைய காலங்களில் 20 திருமணப் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு வந்ததாகவும், காலப் போக்கில் அது 11 ஆகக் குறைந்தாகவும் சொல்லப்படுகிறது. ஜாதகப் பொருத்தம் பார்த்து முடிவு செய்யப்படும் திருமணங்கள் தொடர்பாக, 10 பொருத்தங்களைப் பார்ப்பது, தற்காலத்தய வழக்கமாக இருந்து வருகிரது.
இந்த 10 திருமணப் பொருத்தங்கள் - உடல், மனம், அன்பு, ஆரோக்கியம், அன்யோன்யம் நிறைந்த நீண்ட மண வாழ்க்கை, கருத்தொற்றுமை, இனிய தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குடும்பம், உறவினர்களுடன் நல்லுறவு, செல்வம், வளம், வாழ்க்கைச் சவால்களை எதிர் கொண்டு வென்று, ஒற்றுமையாய் வாழும் திறம் – போன்ற முக்கிய அம்சங்களில், அந்த குறிப்பிட்ட ஆண், பெண் இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமைகளை, அதாவது, பொருத்தங்களை ஆராய்ந்து அறிகிறது. இதன் மூலம், அவர்கள் இருவரும், கணவன் மனைவியாக, ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், நன்கு குடும்பம் நடத்த உள்ள சாத்தியங்களை நிர்ணயிக்கிறது. இதன் அடிப்படையில், அந்த இருவரது திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
10 பொருத்தங்கள்
ஜோதிடத் துறையில் புகழ் பெற்ற இந்த 10 திருமணப் பொருத்தங்கள் – தினப் பொருத்தம், கணப் பொருத்தம், வசியப் பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் மற்றும் வேதைப் பொருத்தம், ஆகும்.
திருமண வயதில் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, இந்த 10 பொருத்தங்களும் அமைந்திருந்தால், அவர்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால், இவ்வாறு, அனைத்துப் பொருத்தங்களும் அமைந்திருப்பது அரிதிலும் அரிதானது; நடைமுறை சாத்தியமில்லாதது. எனவே இந்தப் 10 பொருத்தங்களும் இருந்தால் தான் திருமணம் என்றால், பலருக்குத் திருமணம் நடக்காமலேயே போய் விடலாம்.
ஆகவே, முழுவதுமாக இல்லாவிட்டாலும் கூட, சில குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தாலே, பொதுவாக திருமணப் பொருத்தம் இருப்பதாகக் கருதி, பல திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.
நடைமுறை இவ்வாறு இருக்கும் நிலையில், ‘திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்?’ என்பது இது தொடர்பாக நம் முன் எழும் முக்கியக் கேள்வியாகும்.
திருமணப் பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்?
நாம் மேலே குறிப்பிட்ட 10 திருமணப் பொருத்தங்கள் ஒவ்வொன்றும், மண வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சத்தைக் குறிக்கிறது. இதன் அடிப்படையில், கீழ்க்கண்ட 6 பொருத்தங்கள் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும் என்பது, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜோதிட விதியாகும். இவை -
தினப் பொருத்தம்,
கணப் பொருத்தம்,
யோனிப் பொருத்தம்,
ராசிப் பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம்
ரஜ்ஜூப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
இவற்றில் தினப் பொருத்தம், பொதுவாக, ஆரோக்கிய வாழ்க்கையையும்; கணப் பொருத்தம், பாசம், பரிவு, சயன, சுக, போக பாக்கியங்கள் ஆகியவற்றையும்; யோனிப் பொருத்தம் தாம்பத்திய உறவில் திருப்தி, மகிழ்ச்சி போன்றவற்றையும்; ராசிப் பொருத்தம், குடும்பம், சொந்த பந்தங்களுடன் சுமுக உறவையும்; மகேந்திர பொருத்தம், குழந்தை பாக்கியத்தையும்; ரஜ்ஜூப் பொருத்தம், நீண்ட ஆயுளையும்; வேதைப் பொருத்தம், வாழ்க்கைச் சவால்களைச் சமாளித்து, ஒற்றுமையுடன் வாழும் திறனையும் குறிக்கின்றன.
‘ஒரு திருமணம் நன்றாக அமைவதற்கு, அடிப்படையான இந்த 6 பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்; இதற்கு மேல், மற்ற சில பொருத்தங்கள் அமைந்திருந்தால், அது அந்தத் திருமணத்தை மேலும் சிறப்பாக்கும்’ என்பதே, ‘எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?’ என்ற கேள்விக்குச் சரியான பதிலாக இருக்கும்.
தோஷங்கள்
ஆனால், ஒரு திருமணத்தை முடிவு செய்வதற்கு இது போன்ற ஜாதகப் பொருத்தங்கள் மட்டும் போதுமா? இல்லை, என்பது தான் இதற்கு விடை.
திருமண விஷயத்தில், பொருத்தங்களைக் காண்பதுடன் கூட, தோஷங்கள் போன்ற சில பாதகமான ஜாதக அமைப்புகளையும் அறிந்து, அவை குறித்த தெளிவையும் பெற வேண்டியதும் அவசியம். திருமணத்தைப் பொருத்தவரை, செவ்வாய் தோஷம் சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், ஷஷ்டாஷ்டக தோஷம் போன்ற தோஷங்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை. ‘இவற்றில் ஏதாவது தோஷம், மணமகன் அல்லது மணமகள் ஜாதகங்களில் இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தால், அவை எவ்வளவு தீவிரமாக அமைந்துள்ளன? தகுந்த பரிகாரங்கள், வழிபாடுகள் மூலம் இவற்றைப் போக்க, அல்லது பாதக விளைவுகளைக் குறைக்க முடியுமா?’ போன்றவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இத்துடன் கூட, குடும்ப இருப்பு, பிள்ளைப்பேறு வாய்ப்பு இருப்பு, களத்திர இருப்பு, ஆயுள் இருப்பு போன்றவையும், திருமணம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களில், அடங்கும்.
இதற்காக, அனுபவம் வாய்ந்த, நல்ல ஜோதிடரை அணுகி, இருவரது ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து, திருமணப் பொருத்தம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விவாதித்துத், தெளிவு பெற வேண்டியது அவசியமாகிறது.
மனப் பொருத்தம்
‘இது போன்ற பொருத்தங்களையும், மற்ற அம்சங்களையும் பார்த்துச் செய்யும் திருமணங்கள் அனைத்தும் சிறப்பாகவா அமைகின்றன? அவற்றில் எவ்வளவோ தோல்வியிலும் முடிகின்றன அல்லவா?’ என்ற கேள்வி பலருக்குள்ளும் எழத்தான் செய்கிறது.
இதற்குக் காரணம், அந்தத் திருமணங்களில், கணவனுக்கும், மனைவிக்கும் மனப் பொருத்தம் இல்லாது போவது தான், என்று தான் கூற வேண்டும். காதல் திருமணங்கள் பல தோல்வியில் முடிவதற்கும் இதுவே தான் காரணமாக அமைகிறது.
உடற் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமார்ந்து மணம் செய்து கொண்டு, பின்னர் அந்த ஈர்ப்பு தீர்ந்து போனதும், தம்பதிகளுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு, பின்னர் விவாகரத்துக்காக நீதிமன்றப்படி ஏறுவதும், இந்த மனப் பொருத்தம் இல்லாத காரணத்தால் தான்.
ஆகவே, வெற்றிகரமான திருமணத்திற்கு, உரிய வயதும், மனப் பக்குவமும் கொண்ட ஆணும், பெண்ணும் கலந்து பேசி, அவர்களுக்குள் நல்ல மனப் பொருத்தம் இருக்கிறதா என்பதை பொறுமையாக ஆராய்ந்து அறிந்து, பின்னரே, திருமண பந்தத்துக்குள் நுழைவது மிகவும் அவசியம்.
எனவே, பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணமாக இருந்தாலும், அதில் ஜாதக ரீதியாகப் பல பொருத்தங்கள் உள்ளதாகவே இருந்தாலும், திருமணத் தம்பதிகளிடையே மனப்பொருத்தம் அமைந்திருப்பது, அனைத்துப் பொருத்தங்களிலும் மிக முக்கியமானது எனலாம்.
Comments
Post a Comment