ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது
ஜாதக கட்டம் - பொதுப் பலன்கள் :
ஒரு ஜாதகத்தில் இருக்கும் பன்னிரண்டு கட்டங்கள் மற்றும் அதில் அமைந்திருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துப் பொதுவான பலன்களைக் கூற முடியும். கிரகங்கள் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது. ஒரு குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலை, அந்த குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த போது கிரகங்கள் அமைந்த நிலையை குறிப்பிடும். இதைக் கொண்டு அந்த நபரின் பொதுவான பலன்களைக் கூற இயலும். ஆனால் வாழ்வில் நடக்கும் சில நல்ல விஷயங்கள் அதாவது மேற்படிப்பு, வெளிநாடு சென்று படித்தல், வேலை வாய்ப்பு, திருமணம், புத்திரப் பேறு போன்றவை எப்போது நடக்கும் என்பதை அறிய இன்னும் சில விஷயங்கள் தேவை. ஏனெனில் பிறந்த போது கோள்கள் அமைந்து இருக்கும் நிலை மட்டுமன்றி தினமும் கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அதிர்வினால் ஏற்படும் தாக்கங்களும் ஒரு ஜாதகரின் வாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும். மேலும் பிறந்த போது ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் தசையும் மாறிக் கொண்டே இருக்கும். இவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஜாதக கட்டம் - கோட்சாரம்
ஒருவரின் ஜாதகத்தில் நல்ல காலம் எப்பொழுது என்பதைக் காண பிறந்த ஜாதகம் மட்டும் போதாது. பிறந்த பொழுது இருந்த கிரக நிலை மட்டுமன்றி அந்த நபரின் நல்ல காலம் கணக்கிடும் நேரத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். கோள்கள் வான் மணடலத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவ்வாறு கோள்கள் நகரும் இந்த நிலையையே கோட்சாரம் என்று கூறுவார்கள். குறிப்பிட்ட கோள்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் குறிப்பிட்ட வேகத்தில் நகரும் தன்மை வாய்ந்தவை. சந்திரன் மிக வேகமாக சுற்றக் கூடியது. இதனை தினக் கோள் என்பர்.சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் இவை மாதக் கோள்கள் ஆகும். குரு மற்றும் சனி வருடக் கோள்கள் ஆகும்.
ஜாதக கட்டம் - விம்சோத்தரிதசை
நாம் பிறந்த நேர நட்சத்திரத்தின் அடிபடையில் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருக்கும் கிரகம் குறிப்பிட்ட காலம் வரை நமது வாழ்வின் நிகழ்வுகளை நிர்ணயிக்கின்றன. அந்த குறிப்பட்ட கிரகங்களின் தசை, புத்தி, அந்தரம், சூட்சுமம், பிராணன் என்று அவைகளின் ஆதிக்கத்திற்கேற்ப மாத,வார, நாள், நிமிட, நொடிப் பலன்களையும் சிறந்த ஜோதிட நிபுணர்களால் துல்லியமாக அறிய இயலும். கோள்களும் அவை தசை நடத்தும் வருடங்களுக் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
பிறந்த நடச்சத்திரமும் தசை நடத்தும் கோளும்:
அசுவினி, மகம், மூலம் - கேது- 7 வருடம்
பரணி, பூரம், பூராடம் -சுக்கிரன் 20 வருடம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -சூரியன்- 6 வருடம்
ரோகினி, அஸ்தம், திருவோணம் -சந்திரன்- 10 வருடம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்- 7 வருடம்
திருவாதிரை, சுவாதி, சதயம் -ராகு- 16 வருடம்
புனர்பூசம், விசாகம், பூறட்டாதி -குரு- 18 வருடம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சனி- 19 வருடம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்- 17 வருடம்
ஒவ்வொரு கிரகமும் சில குறிப்பிட்ட நல்ல பலன்களுக்கு காரணமாக அமைகின்றன.
ஒரு குறிப்பிட்ட ஜாதக பலன் எப்பொழுது நடைபெறும் என்பதை நிர்ணயம் செய்ய ஜோதிடத்தில் தசா முறைகள் பெரிதும் பயன்படுகின்றன. தசா புக்தி முறையில் தசையை மட்டும் அனுசரித்து கால நிர்ணயம் செய்வது சாத்தியமில்லை. தசாக் காலம் என்பது நீண்ட வருடம் கொண்டது. புக்தி என்பது ஓரிரு வருடங்களைக் கொண்ட காலம். அந்தரம் என்பது ஓரிரு மாதங்களைக் கொண்ட காலம் ஆகும். எனவே கால நிர்ணயம் செய்ய புக்தி அந்தரங்கள் மட்டுமே பயன்படும்.
ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் புக்தி மற்றும் அந்தரம் எல்லா கிரகங்களின் தசைகளிலும் இடம் பெறும். எனவே ஒரு குறிப்பிட்ட நல்ல பலனை தரக் கூடிய புக்தி அந்தரங்கள் எந்த குறிப்பிட்ட கிரகத்தின் தசையில் பலனைத் தரும் என்று கூற முடியாது. எனவே முதலில் ஜாதகருக்கு குறிப்பிட்ட நல்ல பலன் நடக்குமா என்பதை முதலில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நடக்கும் என்றால் எப்பொழுது நடக்கும் என்பதை தசா - புத்தி - அந்தரம் மூலமாக நாம் அறிய இயலும்.
முதலில் ஒரு ஜாதகரின் நடப்பு தசை மற்று புக்தி எந்தக் கிரகத்திற்கு உரியது என்பதை முதலில் காண வேண்டும். ஜாதகத்தில் அந்த தசா அதிபதியும் அந்த புக்தி அதிபதியும் அசுப இடங்களில் இல்லையா என்பதை அதாவது ஒருவருக்கொருவர் 6/8 அல்லது 1/12 வீடுகளில் இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி நன்மையைச் செய்யாது.எனவே அது நல்ல நேரம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஜாதக கட்டம் - தசா புக்தியை வைத்து நல்ல பலன் தரும் அமைப்புகள்:
திரிகோண வீடுகள் எனப்படும் 1, 5, 9ஆம் வீடு,மற்றும் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10ஆம் வீடு ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அடுத்து நமது விருப்பங்கள் நிறைவேறும் இடம் என்றும் லாப ஸ்தானம் என்றும் கூறப்படும் 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது. இது பொதுவான விதி. ஜோதிடத்தில் பல விதி விலக்குகள் உள்ளன.
ஜாதக கட்டம் - கோட்சாரத்தை வைத்து நல்ல பலன் தரும் அமைப்புகள்:
பொதுவாக குருவும் சுக்கிரனும் நல்லாது நடக்க காரணமாக அமைவார்கள். அதிலும் முக்கியமாக கோச்சாரத்தில் குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது. குருவானவர் ஜென்ம ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார்.
1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.
மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான் அளிப்பார்.
Comments
Post a Comment