வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது
ஜோதிடமும், ஜாதகமும்
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள், பல வகையிலும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களாக உள்ள ஆணையும், பெண்ணையுமே, திருமண பந்தத்தில் இணைக்க விரும்பினர். இதற்காக, அவர்கள் இருவரிடையே, உடல், மனம், உணர்வு என அனைத்து நிலைகளிலும் நிலவும் ஒற்றுமையைக் கண்டறிய, நமது பழமையான வேத ஜோதிடத்தின் துணையை நாடினர்.
ஜோதிட சாஸ்திரம் என்பது, நடைமுறையில், ஜாதகம் என்பதன் அடிப்படையில் இயங்குகிறது. ஒருவர் இவ்வுலகில் பிறக்கும் தருணத்தில், அந்த இடத்தில், வான் வெளியில் நிலவும் கிரகங்களின் அமைப்பை, ஒருவரது ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு உள்ள கிரகங்களின் அமைப்பும், பிறகு ஏற்படும் அவற்றின் இயக்கங்களும், ஒருவரது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், அவர் அனுபவிக்க இருக்கும் சுக, துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன என்பது, ஜோதிடக் கலையின் அடிப்படை விதியாகும். எனவே, ஒருவரது ஜாதகத்தை ஆராய்வதன் மூலம், அவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ள இயலும் என்பது, பல்லாண்டு கால அனுபவங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.
திருமணத்திற்குத் தகுதியான ஒரு ஆண், பெண் இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமை, அதாவது பொருத்தம் என்பது, அவர்கள் இருவரது ஜாதகங்களை ஆராய்ந்தும், ஒத்திட்டுப் பார்த்தும் அறியப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜாதகம் என்பதைக் கணிப்பதற்கு, இரண்டு முறைகள் உள்ளன. இவை வாக்கிய முறை மற்றும் திருக்கணித முறை ஆகும்.
வாக்கிய முறையும், திருக்கணித முறையும்
தொன்று தொட்டு, ஜாதகம் கணிப்பதற்க்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த முறை வாக்கிய முறை ஆகும். எனவே, காலம் காலமாக நமது முன்னோர்கள், ஜோதிட சாஸ்திரத்தில் பயன்படுத்தி வந்த முறை வாக்கிய முறையே ஆகும்.
ஆனால் காலப்போக்கில், இந்த முறையில் உள்ள பல குறைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின. இந்த முறையைப் பின்பற்றி, வடிக்கப்பட்ட ஜாதகங்களில் சில தவறுகள் ஏற்படுவதையும், அவற்றை ஆராய்வது சில தவறான முடிவுகளைத் தருவதையும் ஜோதிடக் கலை வல்லுநர்களும், மற்றவர்களும் உணரத் தொடங்கினர். இதன் அடிப்படையில், வாக்கிய முறையில் காணப்படும் குறைகளைக் களையும் வகையில் ஒரு புதிய ஜாதகக் கணிப்பு முறை உருவாக்கப்பட்டது. இதுவே, திருக்கணித முறையாகும்.
திருக்கணிதச் சிறப்பு
திருக்கணித முறை என்பது, காலங்களையும், நேரங்களையும் கணக்கிடுவதில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கணக்கில் கொண்டு, வடிவமைக்கப்பட்ட முறையாகும். தொழில் நுட்பம் போன்ற பலவற்றிலும் முன்னேற்றம் கண்டுள்ள, தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற ஜோதிட, ஜாதகக் கணிப்பு முறையாகும். தற்காலத்தைய கணிதம் மற்றும் சிந்தனை ஆகியவற்றிற்கு ஏற்புடைய ஒன்றாகும். எனவே, திருக்கணித முறை என்பது, ஜாதகம் கணித்து, அதன் அடிப்படையில் எதிர்காலத்தையும், ஜோதிடப் பலன்களையும் ஆராய்ந்து கூறுவதற்கு, மிகவும் சரியான ஒன்றாகத் திகழ்வதாக, பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.
வாக்கிய முறை சம்பிரதாயமான ஒன்றாகத், தொன்றுதொட்டு அனுசரிக்கப்பட்டு வரும் முறை என்றாலும், திருக்கணித முறை என்பது தற்போதையக் கணித முறைகள், அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, தற்காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ப அமைந்துள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம்.
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் புகழ் பெற்ற ஜோதிடர்களைக் கொண்ட குழு ஒன்று, ஜோதிடம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் கருத்தில் கொண்டு, இந்தத் திருக்கணித முறையின் சிறப்பை உலகரியச் செய்து, அதை ஜோதிட உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
எனவே, கல்வி, உடல்நிலை, வேலை, தொழில், வருமானம், நிதிநிலை, திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப உறவுகள், தம்பதியர் இடையே சுமுகமான உறவு போன்ற, வாழ்க்கை தொடர்பான எந்த முக்கிய அம்சமாக இருந்தாலும் சரி, ஜாதகம் கணித்து, அதை ஆராய்ந்து பலன் சொல்வதற்கு, திருக்கணித முறையைப் பயன் படுத்துவதே சிறந்தது எனக் கொள்ளலாம்.
சில முக்கிய அம்சங்கள்
மேலும், திருக்கணித முறைப்படி ஜாதகத்தைக் கணிக்கும் பொழுதும், அதை ஆராயும் பொழுதும், கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இப்பொழுது பார்க்கலாம்.
அமெரிக்கா போன்ற அயல் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தைக் கணிக்கும் பொழுது. அந்தக் குழந்தை பிறந்த இடம், நேரம் இவற்றைக் கொண்டே, அதன் ஜாதகம் கணிக்கப்பட வேண்டும். இப்படி இல்லாமல், அதற்கு சமமான இந்திய நேரத்தைக் கொண்டு கணிப்பது தவறாக முடியும்.
திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் பொழுது, சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவரது ஜாதகத்தையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்த பின்னரே, அந்த இரு ஜாதகங்களையும் ஒன்றாக ஆராய்ந்து, ஒப்பிட்டுப், பொருத்தம் பார்க்க வேண்டும்.
செவ்வாய் தோஷம் போன்ற, மண வாழ்க்கையைக் கடுமையாக பாதிக்கக் கூடிய தோஷங்களை, இருவர் ஜாதகங்களிலும் கவனமாக ஆராய்ந்து அறிந்து, அதன் பின்னரே அந்த இருவருக்கும் திருமணப் பொருத்தம் ‘இருக்கிறது’ அல்லது ‘இல்லை’ என முடிவு செய்வது அவசியம்.
இருவர் ஜாதகங்களிலும் தோஷங்கள் இருந்தால், இவை சமமாக இருக்கின்றனவா, இவற்றால் பாதகம் விளையாமல் இருக்குமா என்பதை எல்லாம் கவனிப்பது முக்கியம்.
தமிழ் பஞ்சாங்கம்
ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நாள், நட்சத்திரம், திதி போன்றவை குறித்து அறிய, தமிழ் பஞ்சாங்கங்களை மக்கள் பயன்படுத்தலாம். எளிமையான இந்தத் தமிழ் பஞ்சாங்கம், வாக்கிய முறை, திருக்கணித முறை என இரண்டு வகையிலும் உள்ளன. உரியவர்களின் துணை கொண்டு இவற்றைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்வது, பல வகையிலும் நன்மை பயக்கும்.
Comments
Post a Comment